கடல் என்பது அக்கரை. நம் கண்ணுக்குத் தெரியாத ஒன்று. அலைகள் ஆர்ப்பரித்து நம்மை வசீகரிக்கும். எந்த வயதுக்காரரையும் தன்னுள்ளே இழுத்து, காலையாவது நனைப்போம் என்று எண்ண வைக்கக்கூடிய அற்புத அழகை உடையது. கரையே இவ்வளவு அழகாய் இருந்தால் நடுக்கடல் எவ்வளவு நன்றாக இருக்கும், கடலின் அக்கரையும் அழகாக இருக்கும் என்று நினைத்து, சிறு வரம்பைத் தாண்டி உள்ளே போனால் என்ன ஆகும்? தன் அழகைக் காட்டி நம்மை கண நேரத்தில் உள்ளே இழுத்துக் கொண்டு, அழுத்தி விடும் அல்லவா! யாரேனும் வந்து காப்பாற்றும்வரை தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான், தப்பித் தவறி உயிரோடிருந்தால்? ஒரே பாடலில், அருணகிரிநாதர், மனிதன் எப்படி ஆசைகளை வளர்த்துக் கொண்டு பாவக் கடலுக்குள் அமிழ்கிறான் என்றும், அனுமன் நிஜத்தில் கடலை எப்படிக் கடக்கிறார் என்றும் சுவைபட எழுதியுள்ளார்.
ஆசாபாசங்கள் ஒன்றுமே இல்லாமல், கரையில் நின்றுகொண்டிருந்த ஹனுமன், துணிந்து கடலில் இறங்கி சாதனை எப்படிப் புரிந்தான்?
சீதையைத் தேடி மேற்கு, கிழக்கு, வடக்கு என்ற மூன்று திசைகளில் சென்ற வீரர்கள் வெறும் கையுடன் வந்து விட்டனர். கவலையும் சோகமும் எல்லோரையும் தாக்குகின்றன. இனித் தெற்கு திசை ஒன்றுதான் உள்ளது, அதில் ஹனுமனை அனுப்பினால் மட்டுமே முடியும் என்று சுக்ரீவன் சொல்கிறான். இந்தக் குறிப்பை உணர்ந்த ஹனுமனும் தென் திசை செல்வது என்றும், திரும்பி வந்தால் பிராட்டியைப் பற்றிய செய்தியுடன் மட்டுமே வருவது என்றும் திட சித்தம் கொள்கிறான். மற்றவருடைய நன்மைக்காக தன்னையே பணயமாக வைப்பது என்பது, எத்தகைய ஒரு தியாக குணம். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் முன்னே நிற்கிறான். இந்தக் கடலை எப்படிக் கடப்போம் என்று யோசிக்கவில்லை. சீதாப் பிராட்டி தென் திசையில் இருப்பாரா என்று தெரியாது, எங்கே கிடைப்பார், ஒரு வேளை அவரைக் கண்டால் தன்னை எப்படி அடையாளம் கண்டு கொள்வது, தான் பார்த்தது சீதாப்பிராட்டிதான் என்று ஸ்ரீராமனுக்கு எப்படி நிரூபிப்பது? இத்தகைய எண்ணங்கள் ஹனுமனிடம் இல்லை. தான் சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் கூட இல்லை. இறை பக்தி ஒன்று மட்டுமே அவனிடம் இருந்தது. அசஞ்சலமான மனத்துடன் அந்தப் பணியை சிரமேற்கொண்டு, பெருங் கடலைத் தாண்டி இலங்கை சென்று அரக்கர்களை அழித்து, பிராட்டியைக் கண்டு, அவர் அளித்த திருவாழி மோதிரத்தைப் பெற்று வந்து, ஸ்ரீராமபிரானிடம் கொடுக்கிறான்.
அந்த ஒருகணம் இராமனது மனது எவ்வளவு நிம்மதி அடைந்திருக்கும்....! அதைக் கண்ட ஹனுமன் எல்லையில்லா சந்தோஷம் அடைந்திருப்பான் அல்லவா! பல வித எண்ணங்களிலும் உழலாமல், தன் கடமையின் மேல் கண்ணாக இருந்து, இராம பக்தியை மட்டுமே முன்னிறுத்தி இந்த சாதனையைப் புரிந்தது அஞ்சனை புத்திரன் சுந்தர புருஷன் அல்லவோ! சுந்தர காண்டத்தின் மையப் பொருளாக உள்ள இந்த த்ருஷ்டாந்தத்தை அருணகிரிநாதர் கதிர்காமத் திருப்புகழில் அருமையாக அனுபவிக்கிறார்.
உடுக்கத் துகில் வேணு நீள்பசி
அவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய்
உறுநோயை
- என்ற திருப்புகழில்
அருட் பொற்றிரு வாழி மோதிரம்
அளித்துற்றவர் மேல் மனோகரம்
அளித்துக் கதிர்காம மேவிய
பெருமாளே
- என்று பாடுகிறார். இந்தத் திருப்புகழ் படித்தால், சுந்தரகாண்ட பாராயணமே செய்தது போலாகி, அது நம்மை கரையேற்றும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.